search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டமன்ற தொகுதி"

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர். #AssemblyConstituency #VotersList
    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1.9.2018 அன்று வெளியிடப்பட்டது.

    1.1.2019 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் ஆகிய சரிபார்க்கும் பணிகள் நடந்தன. இதில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 385 பேர் தங்கள் பெயர்களை சேர்க்கும்படி மனு கொடுத்தனர்.

    ஏற்கனவே இருந்த வாக்காளர்களில் 4 ஆயிரத்து 371 பெயர்கள் நீக்கப்பட்டன. தகுதி இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் 80 ஆயிரத்து 293 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இறுதி வாக்களர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி கமி‌ஷனருமான கார்த்திகேயன் வெளியிட்டார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கடந்த 5 மாதங்களாக வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்தது. இதில் பெயர் விடுபட்டவர்கள், குடிபெயர்ந்தவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் யார்-யார் என்பதை கள ஆய்வு செய்து பட்டியல் திருத்தப்பட்டது. இந்த பணி இன்றுடன் நிறைவுபெற்றது.

    வழக்கத்துக்கு மாறாக இந்த முறை இந்த பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் 5 மாதங்களை வழங்கி இருந்தது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளின் திருத்தப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

    இதன்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 18 லட்சத்து 83 ஆயிரத்து 989 பேர். பெண்கள் 19 லட்சத்து 34 ஆயிரத்து 78 பேர். இதர பிரிவினர் 932 பேர்.



    தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் வரைவு வாக்காளர் பட்டியலை தவிர 26 ஆயிரத்து 873 வாக்காளர்கள் அதிகம். இது 0.71 சதவீதமாகும்.

    குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்களை கொண்ட தொகுதியாக துறைமுகம் உள்ளது. இங்கு ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர்.

    அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி வேளச்சேரி. இங்கு 95 ஆயிரத்து 95 வாக்காளர்கள் உள்ளனர்.

    தற்போது வெளியிடப்பட்ட பட்டியலின்படி 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வாக்காளர்கள் 43 ஆயிரத்து 829 பேர். புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும்.

    கடந்த 10 நாட்களுக்குள் யாராவது இடம்மாறி இருந்தாலோ, பெயர்கள் விடுபட்டு இருந்தாலோ அவர்கள் தகுதியான சான்றிதழ் கொடுத்தால் வாக்காளர் பட்டியலில் இடம்பெறலாம். இது துணை வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் அதை சரிசெய்து கொள்ளலாம். அரசியல் கட்சிகள் பெரிதாக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வி.என்.ரவி, ராஜேஷ் ஆகியோர் வாக்காளர் பட்டியலை பெற்றுகொண்டனர்.

    தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர்கள் மதன் மோகன், மருதுகணேஷ், காங்கிரஸ் மாவட்டதலைவர் சிவராஜசேகர், நாச்சிகுளம் சரவணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மதிவாணன், பா.ஜனதா மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர்.

    பேட்டியின்போது சென்னை மாநகராட்சி துணை கமி‌ஷனர் லலிதா உடன் இருந்தார். #AssemblyConstituency #VotersList

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக 575 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நலனுக்காக செயலாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார். #kamalHassan
    சென்னை:

    கட்சியின் கட்டமைப்பினை வலுப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 575 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்களுக்கான அரசியல், மக்களுக்கான கட்சி என்கின்ற தெளிவுரையுடன், தமிழகத்தின் வளர்ச்சிக்காவும், தமிழர்களின் ஏற்றத்திற்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.

    புதிய மாற்றத்தினை முன்னிறுத்தி, தெளிவாகவும் நேர்மையாகவும், தொலைநோக்குப்பார்வையுடனும் ஒவ்வொரு நகர்விலும், தமிழர்களின் பெரும் நம்பிக்கையாக வலுப்பெற்று நாங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றோம். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனத்தினை அறிவித்திருக்கின்றோம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் வழங்கப்படுவது பதவியல்ல. அது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை அனைவருக்கும் பலமுறை பல்வேறு தருணங்களில் நான் கூறியிருக்கின்றேன். அதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகின்றேன். எனவே அதை நினைவில் நிறுத்தி கட்சியின் விழியாகவும், செவியாகவும், குரலாகவும் கடமையுணர்வுடன் செயலாற்றவேண்டும்.

    சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளையில் இந்த பொறுப்பினை, உங்களது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாமல், மக்களின் தொண்டர்களாக, மக்கள் நலனை முன்னெடுப்பதற்கான அரிய வாய்ப்பாக பயன்படுத்தி செயலாற்றவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #kamalHassan
    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனு கொடுத்துள்ளதாக தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்துள்ளார்.
    சிவகாசி:

    கடந்த 1.9.2018 அன்று துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1,16,756 ஆண் வாக்காளர்களும், 1,21,686 பெண் வாக்காளர்களும், 22 திருநங்கைகளும் இருந்தனர். இந்த நிலையில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை தொடர்ந்து சிவகாசியில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் ஆர்வமுடன் கலந்து கொண்ட 18 வயது நிரம்பிய இளைஞர்கள் 4,743 பேர் நேரடியாகவும், 332 பேர் ஆன்-லைன் மூலமாகவும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனு செய்து இருந்தனர். இந்த மனுக்களை தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகுதியானவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இதனை சிவகாசி தாசில்தார் பரமானந்தராஜா தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர் சரி பார்க்கும் பணி வாக்குச்சாவடி நிலையஅலுவலர் மூலம் நடத்தப்பட்டது. இதில் 3,260 பேர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. இவர்கள் குறித்த தகவல் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையிலும், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இறந்தவர்கள் என்று கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்ட தகவலில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் வருகிற 29-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.

    அதே போல் 18 வயது நிரம்பியவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் தங்களதுபெயர்களை சேர்க்க கோரி மனு கொடுக்கலாம். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
    கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2019 சிறப்பு சுருக்க முறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று வெளியிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2019-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டு கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை வைக்கப்படவுள்ளன.

    மேலும் வருகிற 8, 22-ந் தேதிகள் மற்றும் அக்டோபர் மாதம் 6, 13-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வருகிற 9, 23, மற்றும் அக்டோபர் மாதம் 7, 14-ந் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடை பெறவுள்ளன.

    மேலும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 250 வாக்குச்சாவடி மையங்களும், 159 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடி மையங்களும், 94 வாக்குச்சாவடி அமைவிடங்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 253 வாக்குச்சாவடி மையங்களும், 195 வாக்குச்சாவடி அமைவிடங்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 267 வாக்குச்சாவடி மையங்களும், 160 வாக்குச்சாவடி அமைவிடங்களும் என மொத்தம் 1,031 வாக்குச்சாவடி மையங்களும், 608 வாக்குச்சாவடி அமைவிடங்களும் உள்ளன.

    பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். நேற்று முதல் அடுத்த மாதம் அக்டோபர் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக் களை அளிக்கலாம்.

    மேலும் http://www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத் (குளித்தலை), தேர்தல் வட்டாட்சியர் விஜயகுமார், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி நேற்று வெளியிட்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 82 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 52 ஆயிரத்து 72 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 29 ஆயிரத்து 988 பேரும், 3-ம் பாலின வாக்காளர்கள் (இதரர்) 213 பேரும் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி, ஓசூர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 1850 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    அங்கு பொதுமக்கள் சென்று தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபார்த்து கொள்ளலாம். 1.1.2019-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி 1.9.2018 முதல் 31.10.2018 -ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்ய விண்ணப்ப படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அரசு வேலை நாட்களில் பெறப்படும்.

    மேலும் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் வருகிற 9-ந்தேதி, 23-ந்தேதி, அக்டோபர் மாதம் 7-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 4 நாட்களில் நடைபெற உள்ளது. இந்த முகாம் நாட்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளிக்கலாம்.

    மேலும் இ-சேவை மையங்களின் மூலமும் பொதுமக்கள் நேரடியாக உரிய படிவங்களை பதிவேற்றம் செய்து இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், தனி தாசில்தார் தணிகாசலம், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ரமேஷ், மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
    ×